பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

1990களில் தென்னிந்தியாவை உலுக்கிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாகக் பயங்கரவாதிகளின் கைது பார்க்கப்படுகிறது.;

Update:2025-07-10 17:39 IST

சென்னை,

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 1995 முதல் பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளில் தொடர்புடைய இவர், 2011இல் மதுரை-திருமங்கலம் வழியாக முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையின் போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் முக்கிய தேடப்பட்டவர் ஆவார்.

அபுபக்கர் சித்திக்குடன், திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த மற்றொரு பயங்கரவாதி முகமது அலியும் கைது செய்யப்பட்டார். இவர்கள் 1995இல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலக வெடிகுண்டு வெடிப்பு, நாகூர் தங்கம் முத்துக்கிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்டு வெடிப்பு, 1999இல் சென்னை, திருச்சி, கோவை, கேரளா உள்ளிட்ட 7 இடங்களில் குண்டு வைத்த வழக்கு, 2012இல் வேலூர் மருத்துவர் அரவிந்த்ரெட்டி கொலை, மற்றும் 2013இல் பெங்களூர் பாஜக அலுவலக வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படை, பல மாதங்களாக இவர்களைத் தேடி வந்த நிலையில், பெங்களூரில் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து ஆந்திராவில் பொறிவைத்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் கைது, 1990களில் தென்னிந்தியாவை உலுக்கிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

அபுபக்கர் சித்திக் நாகூரைச் சேர்ந்தவர், முகமது அலி திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் கைது, தமிழ்நாடு காவல்துறையின் பயங்கரவாதி எதிர்ப்பு முயற்சிகளில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது, மேலும் இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023-ஆம் ஆண்டில், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின் கீழ், #பயங்கரவாத தடுப்பு பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாடு காவல்துறை, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் காவல்துறையினர் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த, அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் பயங்கரவாதிகளை, அண்மையில் நமது ஏடிஏஸ் ( பயங்கரவாத தடுப்பு பிரிவு ) படையினர் சிறப்பாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளனர். உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலக் காவல்துறையினருக்கும் எமது நன்றிகள். என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்