கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையினை முதல்-அமைச்சர் வழங்க உள்ளார் - அமைச்சர் தகவல்

1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்-அமைச்சர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-15 18:18 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (15.09.2025) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், பொது சுகாதாரத்துறையில் ஆய்வக நுட்புநர் பணியிடத்திற்கும், உணவு பகுப்பாய்வு கூடங்களில் முதுநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கும், ஆய்வக தொழில்நுட்புநர் பணியிடத்திற்கும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணையினை வழங்கினார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்புவது என்பது தொடர்ந்து மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மூலம் 644 பணியிடங்களுக்கு பணி ஆணைகள் தரப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னாள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்ட ஆய்வக தொழில் நுட்புநர்கள் 42 பேருக்கு பணிவரன்முறை ஆணைகள் வழங்கப்பட்டது.

ஒப்பந்த அடிப்படையிலான பணிகளை நிரந்தரப் பணிகளாக மாற்றப்பட்டு பணியமர்த்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் முதுநிலை பகுப்பாய்வாளர் பணியிடம் 15 காலிப்பணியிடங்களாக இருந்தது, அதற்காக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சார்பாக விண்ணப்பம் பெறப்பட்டு தேர்வு நடத்தி அதில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் இன்று பணிஆணைகள் வழங்கப்பட்டது.

ஆய்வக தொழில்நுட்பவியர் நிலை-2 பணியிடத்திற்கு 3 காலிப்பணியிடங்கள் இருந்தது, அந்த காலிப்பணியிடங்களும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் இன்று பணிநியமன ஆணைகள் தரப்பட்டது. உணவுப் பாதுகாப்புத்துறையில் முதுநிலை பகுப்பாய்வாளர் பணியிடம் 15 நபர்களுக்கும், ஆய்வக தொழில் நுட்புநர் நிலை- 2 பணியிடங்கள் 3 நபர்களுக்கும் ஆக மொத்தம் 18 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 42 ஆய்வக தொழில் நுட்புநர்களுக்கு பணிவரன்முறை ஆணைகள் தரப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையில் 4 ஆண்டுகளில் பணிநியமனங்கள்

இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறையில் ஒவ்வொரு பணிநியமனங்களும் மிக நேர்மையான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலமாக இதுவரை 7,823 பேருக்கு பணிநியமன ஆணைகள் தரப்பட்டுள்ளது. மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், இளநிலை பகுப்பாய்வாளர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், ஆய்வக நுட்புநர்கள் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் 7,823 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

281 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 3,009 பேர் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 3,653 தற்காலிக செவிலியர்களுக்கு நியமன செவிலியர்களாக பணி ஆணைகள் தரப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு, 2011 புதிய பணி ஆணைகள் தரப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தேசிய நலவாழ்வு குழுமம் மூலமாகவும், மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் மூலமாகவும் 14,272 பேருக்கு மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராமப் புற செவிலியர்கள் (ANM), செவிலியர்கள், பல் மருத்துவ உதவியாளர்கள் போன்ற பல்வேறு பணிடங்களுக்கு பணி ஆணைகள் தரப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கு மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் 2832 பேருக்கு பணி ஆணைகள் தரப்பட்டது. புதிதாக தமிழ்நாட்டில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறந்து வைத்தார்கள். அதற்கு மட்டுமே மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் என்று 506 பேர் பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆக மொத்தம் 33,987 பேருக்கு பணி நியமன ஆணைகள் இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு வழங்கப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் இந்த துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பணியாளர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணிமாறுதல் ஆணைகளும் தொடர்ச்சியாக தரப்பட்டுள்ளது. இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு 43,755 பேருக்கு கலந்தாய்வு மூலமாக பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கிராம சுகாதார செவிலியர் (VHN) 2,250 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தது, அந்த வழக்குகளை எல்லாம் மூத்த வழக்கறிஞர்கள் மூலம் எதிர்கொண்டு அதற்கான தீர்ப்பு கடந்த 15 நாட்களுக்கு முன்னால் பெறப்பட்டு,

2250 கிராம சுகாதார செவிலியர்களில் அரசு துணை செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு பணி ஆணைகள் தரலாம் என்கின்ற வகையில் உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வந்தது. ஆக இந்த 2250 பேரில் 1,231 பேருக்கு பணி ஆணைகள் தருவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு அவரவர் விரும்பும் இடங்களிலேயே பணி ஆணைகள் தரப்பட உள்ளது. வருகின்ற 22.09.2025 காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் சென்னை கலைவாணர் அரங்கில் 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்க உள்ளார்கள். மீதமுள்ள கிராம சுகாதார செவிலியர்களுக்கான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆணையர் லால்வேனா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம், கூடுதல் இயக்குநர் தேவபார்த்தசாரதி, துணை இயக்குநர் சித்ரசேனா மற்றும் உயரலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்