நாணயங்களை விழுங்கும் குழந்தைகள்... பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? - மருத்துவர் அறிவுறுத்தல்
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நடப்பாண்டில் நாணயங்களை விழுங்கிய 110 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
பிறந்த குழந்தையை பராமரிப்பது என்பது பெற்றோர்களுக்கு மிகவும் சவாலான ஒரு விஷயமாக உள்ளது. அதுவும் தற்போதுள்ள இளைய தலைமுறை குழந்தைகளை கவனிக்க படாத பாடுபட்டு வருகின்றனர். ஒரு நிமிடம் கண் பார்வையில் இருந்து தவறினாலும் குழந்தைகள் கையில் கிடக்கும் பொருட்களை எடுத்து வாயில் போட்டு கொள்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் ஒருசில உணவு பொருட்கள் குழந்தைகளின் சுவாசக்குழாய்களிலும், உணவுக்குழாய்களிலும் சிக்கி உயிருக்கே ஆபத்தாக முடிகிறது. இதுதொடர்பாக, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறியதாவது:-
3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு பட்டன், பேட்டரி போன்ற சிறிய பொருள்கள் விளையாட வழங்கக் கூடாது. அவை எளிதில் சுவாசப் பாதைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடும். இதுபோன்று சிக்கிகொண்ட பொருட்கள் மூச்சுக்குழாய்களில் நீண்ட நாட்கள் இருந்தால் குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் பல மாதங்களாக இருக்கும். இதனை பெற்றோர்கள் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால் குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும்.
மேலும், நாணயங்கள் உள்ளிட்ட பெரிய அளவிலான பொருட்களை விழுங்கும் போது அவை உணவுக்குழாய்களில் சிக்குகிறது. அவ்வாறு சிக்கும்போது குழந்தைகளுக்கு எளிதாக சாப்பிட முடியாது மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாதத்திற்கு ஏறக்குறைய 8 குழந்தைகள் பொருட்களை விழுங்கிவிட்டு சிக்கி கொண்டது என சிகிச்சைக்கு வருகின்றனர்.
அந்த வகையில், நடப்பாண்டில் மட்டும் நாணயங்கள், வேர்க்கடலை உள்ளிட்ட பொருட்கள் விழுங்கியதாக 110 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களுக்கு எண்டோஸ்கோபி எனப்படும் ஒரு மெல்லிய குழாய் மூலம் சிக்கி இருக்கும் பொருட்கள் அகற்றப்படுகிறது.
குழந்தைகள் ஏதாவது பொருளை விழுங்கி விட்டால் பெற்றோர்கள் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும். ஒரு வேளை நாணயங்களை விழுங்கி குழந்தைகள் சுய நினைவை இழக்கும் சூழல் ஏற்பட்டால் மட்டும் குழந்தையின் தலையை கீழே சாய்த்து, தோள்பட்டைகளுக்கு இடையில் வேகமாகத் தட்டி முதலுதவி அளிக்க வேண்டும். மற்றப்படி, லேசான பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கு முதலுதவி என்ற பெயரில் எதாவது செய்து நிலைமையை இன்னும் மோசமாக்கி விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.