ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.;
"மக்களால் நான்.. மக்களுக்காக நான்" என்ற கர்ஜனை குரலுக்கு சொந்தக்காரர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, 70 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த போதிலும், சிகிச்சை பலனளிக்காமல் இதே நாளில் (டிசம்பர் 5) இம்மண்ணைவிட்டு மறைந்தார்.
அவர் மறைந்து 9 ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க. தொண்டர்களால் என்றென்றும் போற்றப்பட்டு வருகிறார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, வைகைச் செல்வன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.