தனிக்கட்சி தொடங்குகிறேனா? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.;
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 9-வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அந்த சந்திப்பின்போது தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலையை எடுத்துக் கூறினேன்.
அதிமுகவை எம்ஜிஆர் எந்த நோக்கத்தில் உருவாக்கினாரோ, ஜெயலலிதா அந்த இயக்கத்தை எப்படி வெற்றிகரமாக வழிநடத்தி நிலைநிறுத்தினாரோ அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம். அதுவே தமிழக மக்களின் கருத்தாகவும் இருக்கிறது என்பதை தெரிவித்திருக்கிறேன்" என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை கேட்ட கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி: 15-ந்தேதி தனிக்கட்சி தொடங்குகிறீர்களா?
பதில்: உங்கள் கேள்வியே தவறு. நான் எந்த சூழ்நிலையிலும், எப்போதும் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை.
கேள்வி: உங்களுடன் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். நீங்கள் எதாவது அவரிடம் பேசினீர்களா? நீங்களும் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புள்ளதா?
பதில்: அவர் என்னிடம் பேசவில்லை. நான் அவரிடம் பேசவும் இல்லை.
கேள்வி: அடுத்த கட்ட நகர்வு என்ன?
பதில்: அடுத்த கட்ட நகர்வு கழகத்தின் தொண்டர்களின் எண்ணப்படி, மக்களின் எண்ணப்படி தான் இருக்கும்.
கேள்வி: 2026 சட்டமன்ற தேர்தலில் உங்களுடைய பங்களிப்பு எப்படி இருக்கும்?
பதில்: எதற்கு அவசரப்படுகிறீர்கள்? இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. பொறுத்திருங்கள்; நல்ல செய்திகள் வரும்.
கேள்வி: அதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்து வருகிறார்கள்?
பதில்: ஜனநாயக நாடு இது. யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.