2642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
2642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.;
சென்னை,
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக மருத்துவ அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 2642 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.2.2025) சென்னை, திருவான்மியூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 2642 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் "மக்களைத் தேடி மருத்துவம்" சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48" போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 986 மருந்தாளுநர்கள், 1021 உதவி மருத்துவர் (பொது), 788 உதவி மருத்துவர் (சிறப்பு தேர்வு), 325 ஆய்வக நுட்புநர் தரம்-III, 200 இருட்டறை உதவியாளர், 172 களப்பணி உதவியாளர், 131 உணவு பாதுகாப்பு அலுவலர், 160 இரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பவியலாளர், 107 நோய்த் தீர்வியல் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 4264 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு 5.1.2025 அன்று தேர்வு நடத்தப்பட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககத்தால் பிப்ரவரி 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் கலந்தாய்வு நடத்தப்பட்டு, தகுதி வாய்ந்த 2642 மருத்துவர்கள், மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர். அதன்படி, மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 2642 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றையதினம் 25 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இப்புதிய மருத்துவ அலுவலர்கள் தமிழகமெங்குமுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரிவர்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் பி. உமா மகேஸ்வரி, இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குநர் ஆர். சீத்தாலட்சுமி, இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு. அருண் தம்புராஜ், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டி.எஸ். செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு. ஜெ. சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மரு. ஜெ. ராஜமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் விழாவில் முதல்-அமைச்சர் ஆற்றிய உரை பின்வருமாறு:-
மக்களின் உயிர் காக்கக்கூடிய உன்னத சேவை செய்வதற்கான பணி ஆணைகளை மருத்துவர்களான உங்களுக்கு வழங்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சியில் நான் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்; பெருமைப்படுகிறேன்.
இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய நம்முடைய அமைச்சர் அவர்களுக்கும், இந்தத் துறையின் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், குறிப்பாக, இங்கு வருகை தந்திருக்கக்கூடிய நம்முடைய மருத்துவர்களுக்கு என்னுடைய நன்றியை, வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
திராவிட மாடல் அரசு என்பது, மக்களைக் காக்கக்கூடிய அரசு. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் உயர்ந்த இலட்சியம். எத்தனை தடைகள் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட நெருக்கடிகள் வந்தாலும் சரி, அதையெல்லாம் எதிர்கொண்டு தன் பணியை மேற்கொண்டு வருகின்றது நம்முடைய திராவிட மாடல் அரசு.
இங்கே 2500 பேருக்கு வழங்கப்பட்டுள்ள பணி ஆணைகளும், சட்ட நெருக்கடிகளைக் கடந்துதான் வழங்கப்படுகிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
உயிர்காக்கக்கூடிய மருத்துவர்களை, மக்கள் மிகவும் உயர்வாக பார்க்கிறார்கள். தமிழ்நாடு இன்றைக்கு இந்தியாவின் மருத்துவத் தலைநகராக இருக்கிறது என்றால், அதற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்பு தான் அதற்கு காரணம் என்பது நமக்கு நன்றாக தெரியும்.
மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள், நகரங்கள் தோறும் அரசு மருத்துவமனைகள், கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெரிய நகரங்களில் பன்னோக்கு மருத்துவமனைகள், உயிர்காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை என்று கலைஞர் உருவாக்கிய கட்டமைப்புதான் மருத்துவ சேவையில் தமிழ்நாட்டை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.
இந்தக் கட்டமைப்பு சரியான முறையில் செயல்படவேண்டும் என்றால், நிச்சயமாக அதற்கேற்றது போல நம்முடைய டாக்டர்கள் தேவை. அதுவும் அரசாங்க மருத்துவமனைக்கு வரக்கூடிய ஏழை, எளிய கிராமப்புற நோயாளிகளை, கர்ப்பிணிப் பெண்களை, குழந்தைகளின் உடல் நோய்களை மட்டுமல்ல, அவர்களின் மனநிலை, புறச்சூழல் இதையும் புரிந்துகொள்ளக் கூடிய டாக்டர்கள் தேவை. கிராமத்திலிருந்தும், சின்னச் சின்ன நகரங்களிலிருந்தும் டாக்டர்கள் உருவானால்தான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சை கிடைக்கும்.
அதைப் புரிந்துகொண்டுதான், முதல் தலைமுறை பட்டதாரிகளின் மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்கிற மகத்தான திட்டத்தைக் கொண்டு வந்தவர் நம்முடைய கலைஞர்.
இன்றைக்கு சிறிய, சிறிய நகரங்களிலிருந்தும் கூட, இத்தனை டாக்டர்கள் உருவாகி இருக்கிறீர்கள் என்றால் அதற்கெல்லாம் வித்திட்டவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அவரது வழியில், திராவிட மாடல் அரசு மருத்துவக் கட்டமைப்பை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் அனைவரும் பாராட்டக்கூடிய அளவில் இன்றைக்கு நாம் உருவாக்கியிருக்கிறோம்.
மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்களின் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களின் வாழ்நாளை நீட்டித்து இருக்கிறது.
"இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48" பல உயிர்களைக் காப்பாற்றி, அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் நிம்மதியாக வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது.
இரண்டு நாள்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு அவசியமான தேவைப்படும் மருந்துகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கத்தான் முதல்வர் மருந்தகங்கள் இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை கிடைக்கவேண்டும், அவர்கள் நோய் குணமாகி, நல்லபடியாக வாழ வேண்டும் என்று திராவிட மாடல் அரசு பல திட்டங்களை கொண்டு வந்தாலும், அதையெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்றால், உங்களைப் போன்ற டாக்டர்களின் பங்களிப்புதான் அதில் மிக மிக முக்கியம். டாக்டர்களான நீங்கள் இல்லாமல் நிச்சயமாக சொல்கிறேன், இந்தத் திட்டங்கள் எல்லாம் இல்லை. மருத்துவத் துறையின் மற்ற பணியாளர்கள் இல்லாமல் இந்தத் திட்டங்கள் நிறைவேறப் போவதில்லை, வெற்றியும் கிடைக்கப் போவதில்லை.
உங்களுக்கு இன்றைக்கு முதல்-அமைச்சர் என்ற முறையில், நான் பணி ஆணைகளை வழங்க இருக்கிறேன். ஆனால், நீங்கள் செய்யப்போவது சாதாரண பணியோ, வேலையோ அல்ல. மக்களின் உயிர் காக்கும் சேவை. சமுதாயத்திற்கான மிகப் பெரிய தொண்டு. இந்த இடத்தை அடைய நீங்கள் எத்தனையோ இரவுகள் கண் விழித்திருப்பீர்கள். பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து இருப்பீர்கள்.
எல்லாவற்றையும் கடந்துதான் இங்கே நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!
இனி, மக்கள் உங்களை நம்பி தங்கள் உயிர் காக்கும் பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற அளவுக்கு, உங்களுடைய சேவை அமையவேண்டும். மக்களின் நலனை நீங்கள் கவனியுங்கள்; மறுபடியும் சொல்கிறேன், மக்களுடைய நலனை நீங்கள் கவனியுங்கள். உங்கள் நலனை கவனிக்க, இந்த அரசு இருக்கிறது. மீண்டும், மீண்டும் சொல்கிறேன்; மக்களுடைய நலனை நீங்கள் கவனியுங்கள்; உங்களுடைய நலனை கவனிக்க இந்த திராவிட மாடல் அரசு இருக்கிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இருக்கிறார். முதல்-அமைச்சரான நானும் இருக்கிறேன்.
உயிர்களைக் காக்கும் தொண்டாற்றப் போகும் உங்களுக்குத் தேவையான, எது எது அவசியம் தேவைப்படுகிறதோ அதையெல்லாம் நிச்சயம் செய்வேன் என்று உறுதி சொல்லி, உங்கள் பணி சிறக்க என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, விடைபெறுகிறேன் என்று அவர் உரையாற்றியுள்ளார்.