தோழர் நல்லகண்ணு மீண்டு வருவார்; முத்தரசன் நம்பிக்கை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு;
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100). அவர் கடந்த 22ம் தேதி வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நல்லக்கண்ணுவை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர்.
ஆனால், நல்லக்கண்ணுவுக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூத்த டாக்டர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று ராஜீவ் காந்தி மருத்துமனைக்கு சென்றார். அவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
தமிழகத்தின் மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு கடந்த 24ம் தேதி முதல் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்-அமைச்சரின் உத்தரவை ஏற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு வந்து நல்லகண்ணுவின் உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கலந்து ஆலோசித்து வருகிறார். ராஜீவ் காந்தி மருத்துவ கல்லூரியின் முதல்வர் தலைமையிலான டாக்டர்கள் தோழர் நல்லகண்ணுவுக்கு தீவிரமான சிகிச்சை அளித்து வருகின்றனர். நல்லகண்ணுவின் உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தோழர் நல்லகண்ணு மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.