வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு பதக்கம், சுடுமண் ஆட்டக்காய் கண்டெடுப்பு
வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு பதக்கம், சுடுமண் ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளன.;
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்டமாக அகழாய்வு பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த அகழாய்வில் தங்க ஆபரணங்கள், சூது பவள மணி, காளை உருவ பொம்மை, சங்கு வளையல்கள், செப்பு காசுகள், சுடுமண் முத்திரை உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், 24.9 மி.மீ. நீளமும், 12.6 மி.மீ. விட்டமும், 6.68 கிராம் எடையும் கொண்ட சங்கினால் செய்த பழங்கால பதக்கம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 27.7 மி.மீ. உயரமும், 25.5. மி.மீ விட்டமும் கொண்ட சுடுமண்ணால் செய்த ஆட்டக்காய் ஒன்றும் கிடைத்துள்ளது. சங்கு பதக்கம் தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில் முதன்முறையாக கிடைத்து இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இது ஒரு மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது.
பழங்காலத்தில் வீரத்தை போற்றும் விதமாகவோ, போட்டியில் வென்றதற்கு அடையாளமாகவோ, ஒருவரை கவுரவிக்கும் விதமாகவே இதுபோன்ற சங்கு பதக்கங்களை அணிவிக்கும் வழக்கம் இருந்து இருக்கலாம், இது தமிழர் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்ப்பதாகும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.