காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றம்
சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்டது;
சென்னை,
மத்திய அரசு கல்வித்தொகையை வழங்காததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் திருவள்ளூர் தொகுதி எம்.பி. சசிகாந்த் செந்தில் நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
இதில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ஜி. சிதம்பரம், லயன் டி. ரமேஷ், வக்கீல் சசிகுமார், கலீல் ரகுமான், கங்கை குமார், வெங்கடேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். காலவரையற்ற உண்ணாவிரதம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. தனது எம்.பி. அலுவலகத்தில் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிகாந்த் செந்தில் எம்.பி. உண்ணாவிரத போராட்டத்திலும் கணினி மூலம் அலுவல்களை கவனித்தார்.
போராட்டத்தின்போது திடீரென சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் சசிகாந்த் செந்தில் தனது உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்தார். இதனால், அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்படக்கூடும் என்பதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சசிகாந்த் செந்தில் மாற்றப்பட்டுள்ளார்.