கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக வழக்கு; மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு
மனு தொடர்பாக நகர திட்டமிடல் துறையின் திண்டுக்கல் மாவட்ட திட்டமிடல் அலுவலர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.;
மதுரை,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தளமான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்குகின்றனர். இதில் பல விடுதிகள் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அந்த வகையில் கொடைக்கானல் அடுத்துள்ள அடுக்கம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக நகர திட்டமிடல் துறையின் திண்டுக்கல் மாவட்ட திட்டமிடல் அலுவலர், உதவி இயக்குநர் மற்றும் கொடைக்கானல் திட்ட மேம்பாட்டு அலுவலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட இடத்தில் நகர திட்டமிடல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை அடையாளம் கண்டு அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.