கடலூர் வில்வராயநத்தம் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
கடலூர் வில்வராயநத்தம் அங்காளம்மன் கோவில் தெருவில் எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக பணி தொடங்கியது.
கடந்த 28-ம் தேதி மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, மகா தீபாராதனை, மூலஸ்தானம் நடைபெற்றது. தொடர்ந்து 29-ம் தேதி வாஸ்து சாந்தி, யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, வேதிகா அர்ச்சனை நடைபெற்றது. 30ஆம் தேதி (நேற்று) இரண்டாம் கால யாக பூஜை, பூத சுக்தி, பூர்ணாஹுதி, மூன்றாம் கால யாக பூஜை, நவசக்தி அர்ச்சனை, சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை, 108 யாக திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, தாரக சங்கீத உபசாரம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.
இன்று நான்காம் கால யாக பூஜை, ரக்ஷா பந்தனம், நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, மூல மந்திர ஹோமம், பட்டுச்சேலை ஹோமம், அஸ்திர ஹோமம், மகா தீபாராதனை, யாத்ரா தானத்தை தொடர்ந்து கடம்புறப்பாடு நடந்தது. யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த புனித நீர், கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.