புயல் எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
4 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலவிய 'டித்வா' புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலையில் இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. டித்வா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது.
நாளை வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டித்வா புயல் எதிரொலியாக விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.