முன்னேற்றம், சமூகநீதிக்காக திமுக அரசு செயல்பட்டு வருகிறது - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மத்திய பாஜக அரசின் அடையாளம் அடக்குமுறை, அதிமுக அரசின் அடையாளம் அடிமைத்தனம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.;
காஞ்சிபுரம்,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின்னர் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன், மகிழ்ச்சியடைகின்றேன்.பேரறிஞர் அண்ணா அவர்களின் இல்லத்திற்கு சென்று அவருடைய திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு அவரை வணங்கிவிட்டு நேராக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெருமையாக நான் கருதுகின்றேன்.
நம்முடைய முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், இன்றைக்கு நம்முடைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், இந்த நிகழ்ச்சியில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.இங்கே வருகை தந்திருக்கக்கூடிய பொதுமக்கள், அதுவும் குறிப்பாக மகளிர் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் மகளிர் வந்திருக்கின்றீர்கள். உங்களுடைய முகங்களில் தெரிகின்ற அந்த மகிழ்ச்சியைப் பார்க்கும்போது, நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய வெற்றி, முதலமைச்சர் அவர்களின் உழைப்பு, அது அனைத்தும் உங்களுடைய சிரிப்புகளிலும், உங்களுடைய எழுச்சிகளிலும் தெரிகின்றது. இதுதான் திராவிட மாடல் அரசிற்கு நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி.
தமிழ்நாட்டினுடைய தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் மண்ணில் உங்களை எல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றிருக்கின்றேன்.நம்முடைய திராவிட மாடல் அரசை பொறுத்தவரை இன்றைக்கு அது எல்லாருக்குமான அரசாக சிறப்பாக விளங்கி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அரசுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். உதாரணத்திற்கு மத்திய பாஜக அரசினுடைய அடையாளமாக அடக்குமுறையை சொல்லலாம். முன்பிருந்த அதிமுக அரசினுடைய அடையாளமாக அதனுடைய அடிமைத்தனத்தை சொல்லலாம். ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசு மட்டும் தான் முன்னேற்றத்துக்கான, சமூக நீதிக்கான அடையாளமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
குறிப்பாக, வந்திருக்கக்கூடிய மகளிர் உங்களுக்கு தெரியும், உங்களுக்காக மட்டும் பல்வேறு திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். நம்முடைய முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவர் போட்ட முதல் கையெழுத்தே உங்களுக்கான கையெழுத்துதான். அதுதான் மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்திற்கான கையெழுத்து. அந்த திட்டத்தின் மூலம் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் நான்கு வருடங்களில் மகளிர் 770 கோடி முறை விடியல் பயணத்தின் மூலம் பயனடைந்துள்ளீர்கள். ஒவ்வொரு மகளிரும் விடியல் பயண திட்டத்தின் மூலமாக பயன்பெற்று மாதம் கிட்டத்தட்ட 900 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை சேமிக்கின்றார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், இன்றைக்கு இந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இந்த 4 வருடங்களில் 44 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளார்கள்.
அதேபோல் இன்னொரு திட்டம் அதுதான் முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டம். முன்பெல்லாம் வேலைக்கு செல்கின்ற பெற்றோர்கள் காலையில் எழுந்து சமைக்க நேரம் இருக்காது, குழந்தைகளை சீக்கிரமாக பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று மதியம் வா சாப்பிட்டுக்கலாம் என்று அனுப்பி விடுவார்கள். அனுப்பி வைத்துவிட்டு குழந்தைகளின் அப்பா, அம்மாவும் கவலையுடன் உட்காந்து இருப்பார்கள். பிள்ளையை பசியோடு அனுப்பினோமே பள்ளிக்கூடத்திற்கு, போய் படித்தானா, சாப்பிட்டானா, தூங்கிவிட்டானா என்று கவலையோடு இருப்பார்கள்.
இதையெல்லாம் அறிந்த நம்முடைய தலைவர் அவர்கள் அறிமுகப்படுத்தியது தான் முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டம். இன்றைக்கு பெற்றோர்கள் வாழ்த்தி, மகிழ்ச்சியோடு தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறார்கள். பள்ளிக்கூடத்திற்கு சென்றால் முதலில் அவனுக்கு தரமான உணவு கொடுக்கப்படும், தரமான கல்வி கற்றுத்தரப்படும் என்று வாழ்த்தி அனுப்புகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் 21 இலட்சம் குழந்தைகள் முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக, பஞ்சாப் மாநிலத்தினுடைய முதல்-மந்திரி தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். அந்த திட்டத்தை விரிவுபடுத்துகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் முதலமைச்சரை பாராட்டி பேசினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே இது ஒரு சிறப்பான திட்டம். இந்த திட்டத்தை நான் என்னுடைய பஞ்சாப் மாநிலத்திலும் நான் விரிவுபடுத்த போகின்றேன் என்று பஞ்சாப் மாநிலத்தினுடைய முதல்-மந்திரி அவர்கள் பாராட்டி பேசினார்.
இப்படி மற்ற முதலமைச்சர்களுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக நம்முடைய முதலமைச்சர் அவர்களும் நம்முடைய தமிழ்நாடும், அரசினுடைய திட்டங்களும் விளங்கிக் கொண்டிருக்கிறது.இது எல்லாவற்றிக்கும் மேல் வந்திருக்கக்கூடிய மகளிர் உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். இந்தியாவே திரும்பி பார்க்கக்கூடிய ஒரு திட்டம். அது தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இதே காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த செப்டம்பர் 15ம் தேதி, 2023 ஆண்டு துவங்கி வைத்தார்கள். இன்றைக்கு இந்த திட்டத்தின் மூலமாக, கடந்த 2 வருடமாக ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு கோடியே 15 இலட்சம் மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை பெற்று வருகிறார்கள்.
இந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு மாதமும் 1 இலட்சத்து 73 ஆயிரம் மகளிர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.
இப்போது நடைபெறுகின்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களின் மூலமாக கூட நிறைய மகளிர், மகளிர் உரிமைத்தொகை எங்களுக்கு பெயர் விடுபட்டு போய்விட்டது எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மனுக்களை கொடுத்து இருக்கின்றீர்கள். நிச்சயம் அந்த மனுக்கள் மீது நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும். விடுபட்ட மகளிருக்கும் நிச்சயமாக வெகுவிரைவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்றைக்கு, இங்கே நிறைய பேர் வீட்டு மனைப் பட்டாக்களை வாங்க வந்திருக்கின்றீர்கள். பட்டா என்பது உங்களுடைய பல நாள் கனவு. இன்னும் சொல்லப்போனால், அரசு அலுவலகத்துக்கு போய் நீங்கள் பட்டாவுக்காக காத்திருந்த நேரம் மாறி இன்றைக்கு அரசே உங்களைத் தேடி உங்களுக்கான பட்டாவை கொடுக்க இருக்கின்றது. ஏன் என்றால், உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம், இந்த மூன்றும் தான் மனிதர்களுக்கான அத்தியாவசிய தேவை. இதில், இருக்க இடம் என்பது அத்தியாவசிய தேவை மட்டுமல்ல, அது உங்களுடைய உரிமை. அந்த உரிமையை நிலைநாட்டுகின்ற வகையில், உங்களுடைய கைகளில் உங்களுடைய பட்டாக்கள் கொடுக்கப்பட இருக்கின்றது. இனி உங்கள் வீட்டில் நீங்கள் மகிழ்ச்சியாக, சந்தோசமாக நிம்மதியாக இருக்கலாம். இனி உங்கள் இடம் முழுதாக உங்களுக்கே சொந்தம். ஆகவே, வீட்டுமனைப்பட்டா பெற்றுள்ள அத்தனைப் பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சமீபத்தில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்று வந்திருந்தார்கள். அதில், கிட்டத்தட்ட 15 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்த்தது மட்டுமல்ல, பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களின் கொள்கைகளையும் அந்த நாடுகளில் முதலீடு செய்து கொண்டு வந்து இருக்கின்றார். இதுபோன்ற பல்வேறு முயற்சிகளால், தமிழ்நாடு இன்றைக்கு சிறப்பாக திகழ்ந்து, தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி 11.19 சதவீதத்தோடு இன்றைக்கு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள், எடுத்து வருகின்ற தொடர் நடவடிக்கைகளால், தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி உங்களுடைய ஒத்துழைப்பால் இன்னும் மிக அதிகமான உயரத்திற்கு செல்ல இருக்கின்றது. ஆகவே, இந்த அரசு எப்படி உங்களுக்கு ஆதரவாக, துணையாக இருக்கிறதோ, அதே போல இந்த அரசுக்கும் நீங்களும் ஆதரவோடு துணையாக இருக்க வேண்டும்.எங்களைப் பொறுத்தவரைக்கும், எங்களுடைய முதலமைச்சர், எங்கள் தலைவர் அவர்கள் தான் எங்களுடைய பிராண்ட் அம்பாசிடர், எங்களுடைய தூதுவர். அது மாதிரி, அரசுக்கு தூதுவர்களாக, பிராண்ட் அம்பாசிடர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.
இந்த அரசினுடைய திட்டங்களையும், சிறப்பான செயல்பாடுகளையெல்லாம் நீங்கள் உங்களுடைய குடும்பத்தினரிடமும், உங்களுடைய நண்பர்களிடம், உற்றார், உறவினர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலிலும், மீண்டும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் தான், நம்முடைய முதலமைச்சர் அவர்களைத் தான் மீண்டும் முதலமைச்சராக நீங்கள் நிச்சயம் தேர்ந்தெடுப்பீர்கள். இன்னும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உங்களுக்கு என்னென்ன தேவையோ அது ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்வார் என்று கூறிக்கொண்டு, இன்றைக்கு நலத்திட்ட உதவிகளைப் பெற வந்துள்ள அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.