நான் இருப்பதே திமுகவிற்கு மறந்துவிட்டது: சசிகலா பரபரப்பு பேட்டி

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தனக்கு எதிரியே இல்லை என திமுக நினைத்துக்கொண்டு இருக்கிறது, நான் ஒருத்தி இருப்பதை மறந்து விட்டு திமுக பேசி வருகிறது என சசிகலா தெரிவித்தார்.;

Update:2026-01-17 15:18 IST

சென்னை,

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாளில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினேன். அவர் முதல்வராக இருந்தபோது மக்களுக்காக பாடுபட்டவர். ஏழை குழந்தைகளுக்காக சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ரேஷன் அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினார். அதற்கு முன்பு தனியார் நிறுவனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பிறகுதான் ரேஷன் கடைகளை அரசு ஏற்று நடத்தியது.

தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே திமுக பொங்கல் பரிசுத் தொகையை வழங்குகிறது. 2023 ஆம் ஆண்டு பொங்கல் தொகையை வழங்கினார்கள். அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் வழங்கவில்லை. இப்போது தேர்தல் வருவதால் திமுக மீண்டும் பொங்கல் தொகையை மக்களுக்கு வழங்குகிறது. தேர்தல் வரும் போது விலைவாசி உயர்வைக் குறைப்பதாக அரசு நடவடிக்கை எடுக்கிறது.

தமிழ், திராவிடம் என்று சொல்லி எத்தனை நாட்கள் மக்களை ஏமாற்ற முடியும்? இப்போது ‘உங்கள் கனவுகளை சொல்லுங்கள்’ என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அப்படியானால் மக்கள் கனவுகள் மட்டும்தான் காண வேண்டுமா? அதிலும் ஒரு சூட்சமம் உள்ளது. அந்த திட்டத்திற்கு தனியார் இடம் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் நமக்கு வாக்களிப்பார்களா என்பதை அறிய திமுக அரசு ஆட்சியை பயன்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் திமுக சொன்னதை செய்தது இல்லை. திமுக என்ன நினைக்கிறது? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரியே இல்லை என திமுக நினைக்கிறது. நான் ஒருத்தி இருப்பதையே திமுக மறந்துவிட்டது.இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்