பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தால் ரேஷன் பொருள் பெறுவதில் சிக்கல்: பிப்ரவரி மாதம் சேர்த்து வழங்கப்படுமா?

ரேஷன் பணியாளர்களும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியமைக்காக ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2026-01-17 11:55 IST

சென்னை,

தமிழ்நாட்டில் சுமார் 34 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கூட்டுறவு சங்கங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த ரேஷன் கடைகள் மூலம் 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கும் பணி நடைபெற்றதால், மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது.

அதாவது, இந்த மாதம் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி கடந்த 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடைபெற்றது. 8-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பொங்கல் விடுமுறை. தொடர்ந்து 25, 26 ஆகிய தேதிகளிலும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வருகிறது.

இதுபோக, விடுபட்டவர்களுக்கும் 19-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதை வைத்து பார்க்கும்போது, இந்த மாதம் ரேஷன் கடைகளில் வழக்கமாக மாதந்தோறும் வழங்க வேண்டிய அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை இன்னும் பெரும்பாலானோருக்கு வழங்கப்படாமல் உள்ளது. எனவே, பிப்ரவரி மாதம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களுடன் ஜனவரி மாத பொருளையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ரேஷன் பணியாளர்களும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியமைக்காக ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்