தமிழக அரசின் மருத்துவக்கல்வி இயக்குனராக டாக்டர் சுகந்தி ராஜகுமாரி நியமனம்
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட டாக்டர் சுகந்தி ராஜகுமாரிக்கு, மருத்துவக்கல்வி இயக்குனரகத்தின் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.;
சென்னை,
தமிழக அரசின் மருத்துவக்கல்வி இயக்குனராக பணியாற்றி வந்த டாக்டர் சங்குமணி, கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து, அப்பணியிடத்துக்கு டாக்டர் சுகந்தி ராஜகுமாரி என்பவரை நியமித்து தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, டாக்டர் சுகந்தி ராஜகுமாரி மருத்துவக்கல்வி இயக்குனராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த இவர், கடந்த 36 ஆண்டுகளாக மருத்துவக்கல்வி பணியில் உள்ளார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக்கல்லூரிகளில் தோல் மருத்துவத்துறையில் பேராசிரியர் மற்றும் துறை தலைவராக பணியாற்றிய அவர், கடந்த 2019-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி டீனாக பொறுப்பேற்றார்.
கடைசியாக, திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக பதவி வகித்தார். மருத்துவக்கல்வி கூடுதல் இயக்குனராகவும் அவர் பதவி வகித்துள்ளார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட டாக்டர் சுகந்தி ராஜகுமாரிக்கு, மருத்துவக்கல்வி இயக்குனரகத்தின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.