மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக 5 மாவட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.;
தேனி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது.
இதைத்தொடர்ந்து அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட குடிநீர், பாசன தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது.
தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை. இதனால் அணைக்கான நீர்வரத்தும் நின்றுபோனது. ஒருபுறம் கூடுதல் தண்ணீர் திறப்பு, மறுபுறம் நீர்வரத்து இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 48 அடியாக சரிந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஒருபோகம் மற்றும் இருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேகமாக சரிந்து வரும் வைகை அணை நீர்மட்டத்தை ஈடுகட்டும் வகையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் கிட்டத்தட்ட 17 அடி குறைவாக உள்ளது. இதனால் இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக 5 மாவட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.