தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு, தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுகுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
தஞ்சாவூர்,
கர்நாடக சங்கீதத்தின் தந்தை என போற்றப்படும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் நினைவாக ஆண்டுதோறும் திருவையாற்றில் நடைபெறும் ஆராதனை விழாவில், நாடு முழுவதிலும் இருந்து இசைக் கலைஞர்கள், பக்தர்கள், இசை ஆர்வலர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். குறிப்பாக பஞ்சரத்தின கீர்த்தனைகள் இசைக்கப்படும் நிகழ்வு, இந்த விழாவின் முக்கிய அம்சமாகும்.
இவ்விழாவை நேரில் காணவும், கலந்து கொள்ளவும் தஞ்சாவூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் பெருமளவில் மக்கள் வருகை தருவது வழக்கம். இதன் காரணமாக போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான ஏற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதி, தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.