நீலகிரி: தேயிலை தோட்டத்தில் காயத்துடன் சுற்றித்திரிந்த புலி உயிரிழப்பு

புலிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் புலிக்கு பலத்த காயங்கள் மற்றும் உள் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தர்.;

Update:2026-01-06 06:12 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே போர்த்தி கிராமத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் காலில் காயங்களுடன் புலி ஒன்று, கடந்த 3 நாட்களாக சுற்றித்திரிந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர். புலி குடியிருப்பு பகுதிக்குள் செல்லாமல் இருக்கவும், கிராம மக்களின் பாதுகாப்பு கருதியும் நீலகிரி வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தெர்மல் டிரோன் மூலம் தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. சோர்வாக இருந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டு இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று வனத்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்த போது, புலி அசைவின்றி இருந்தது. இதனால் வன ஊழியர்கள் அருகில் சென்று பார்த்த போது, புலி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அதன் முன்னங்கால்களில் காயம் ஏற்பட்டு எலும்புகள் உடைந்திருந்தன. இதனால் நடக்க முடியாமல் தேயிலை தோட்டத்தில் புலி தஞ்சமடைந்தது தெரியவந்தது. மேலும் புலியின் கண்களிலும் காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் புலிக்கு உடற்கூறாய்வு நடந்தது. 2 புலிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் புலிக்கு பலத்த காயங்கள் மற்றும் உள் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தர்.

 

Tags:    

மேலும் செய்திகள்