தி.மு.க.வை கண்டித்து மறைமலைநகரில் 8ம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மறைமலைநகரில் மக்களின் அடிப்படை தேவைகளை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தி.மு.க. அரசை கண்டித்து வரும் 8ம்தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.;
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு குறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நிர்வாகத் திறனற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, கடந்த 55 மாதகால விடியா தி.மு.க. ஆட்சியில், மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தராமல், திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது விடியா தி.மு.க. அரசு. இதற்கெல்லாம் விடிவுகாலம் வெகு விரைவில் வர உள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அந்த வகையில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு:
மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருவதால், மாணவ-மாணவியர் மற்றும் அப்பகுதிவாழ் மக்கள் உள்ளிட்டோர் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இங்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளால் சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கிறது. பெரும்பாலான சாலைகளில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் ஆறுபோல் வழிந்தோடுவதால் பாதசாரிகள், வாகனங்களில் பயணிப்போர் உள்ளிட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும், விபத்துகளுக்கும் ஆட்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இங்குள்ள தொல்காப்பியர் சாலையில் சமுதாயநலக்கூடம் மற்றும் விளையாட்டுத்திடல் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட காலமாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் இருப்பதால் மாணவ, மாணவியர், ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
மறைமலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட கூடலூர்-கடம்பூர் இணைப்புச் சாலை அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டும் பணிகள் தொடங்கப்படாத காரணத்தால், நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது.
கழக ஆட்சிக் காலத்தில் மக்கள் நலன் கருதி, பல இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முறையாக வழங்கப்பட்டு வந்தது. விடியா தி.மு.க. ஆட்சியில், முறையான பராமரிப்பு இன்றி முடக்கப்பட்டுள்ளதால், குடிநீருக்காக மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
குடிநீர் மற்றும் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கும் நின்னைக்கரை ஏரி, காட்டாங்கொளத்தூர் ஏரி, பொத்தேரி ஆகிய ஏரிகள் முறையாக பராமரிக்காததோடு, கழிவுநீர் கலக்கப்பட்டு குட்டைகளாக மாறி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வரும், விடியா தி.மு.க.-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நிலையில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்குக் காரணமான; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் விடியா தி.மு.க.-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மறைமலைநகர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகரத்தின் சார்பில் 8.1.2026, வியாழக்கிழமை மாலை 4 மணியளவில், மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் தலைமையிலும்; செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், மறைமலைநகர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.