’மாநில அரசே ஆதரவு அளித்தால் மட்டுமே பொது அமைதிக்கு...’ - திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் கோர்ட்டு அதிரடி கருத்து

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது;

Update:2026-01-06 18:11 IST

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், தீபத்தூண் அருகே தர்கா இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி தீபம் ஏற்ற தமிழக அரசு மறுத்துவிட்டது.

மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், தமிழக அரசின் செயல்பாட்டிற்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் கோவிலுக்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நிர்வாக பிரதிநிதிகளை மலையில் உள்ள தீபத்தூணில் ஆண்டுக்கு ஒருமுறை தீபம் ஏற்ற அனுமதித்தால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என மாநில அரசு அஞ்சுவது அபத்தமானதாகவும், நம்ப முடியாததாகவும் உள்ளது.

இந்த விவகாரத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாநில அரசே ஆதரவு அளித்தால் மட்டுமே பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். அரசியல் ஆதாயத்திற்காக எந்த ஒரு மாநில அரசும் இதுபோன்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அளவிற்கு செல்லாது என நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராக சந்தேகத்திகீழ் வைப்பதற்காக தமிழக அரசு அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை பேய்’

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

அதேவேளை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் சுப்ரீம் கோட்டில் மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்