ராமேசுவரம்-கோவை ரெயிலில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது

பயணிகளிடம் பணம் பறிக்க முயன்ற போலி டிக்கெட் பரிசோதகரை போலீசார் கைதுசெய்தனர்.;

Update:2025-08-22 01:49 IST

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, சென்னை, குஜராத், அஜ்மீர், அயோத்தி, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ராமேசுவரத்தில் இருந்து திருச்சி வழியாக கோவைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16617) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரெயிலின் சாதாரண வகுப்பு பெட்டியில் ஒரு நபர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார்.

அப்போது, அதே ரெயிலில் டிக்கெட் பரிசோதனையில் திருச்சி கோட்டத்தை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் கே.எம்.சரவணன் என்பவர் ஈடுபட்டிருந்தார். அவர் பரமக்குடி ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லாத பெட்டியில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே ஒருவர் டிக்கெட்டை சரிபார்த்து விட்டார் என்று பயணிகள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த டிக்கெட் பரிசோதகர் சம்பந்தப்பட்ட நபரிடம் அடையாள அட்டை மற்றும் டிக்கெட் பரிசோதகருக்கான ஆவணங்களை கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுக்கவே ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும், திருச்சி ரெயில்வே கோட்ட வர்த்தக கட்டுப்பாட்டு பிரிவுக்கும் தகவல் தெரிவித்தார். இதற்கிடையே மானாமதுரைக்கு ரெயில் வந்தடைந்தது. அங்கு அவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர் காட்டுபரமக்குடி தெளிச்சாத்தநல்லூரை சேர்ந்த ராம்பிரகாஷ் என்பதும், போலி டிக்கெட் பரிசோதகர் என்பதும், பயணிகளிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்