வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்: அதிர்ச்சி அடைந்த நெல்லை தொழிலாளி
தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனிதப் பிழை காரணமாக இது நிகழ்ந்துள்ளது என்று மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.;
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்படி மின்வாரிய உபகோட்டத்திற்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவரது வீட்டிற்கு வழக்கம்போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்தார். அவர் கணக்கீடு செய்து முடித்துவிட்டு சென்ற நிலையில், மாதாந்திர மின்கட்டண விவரம் மாரியப்பனின் செல்போனுக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் தனது செல்போனில் மின்கட்டணத்தை செலுத்த முயன்றபோது, காட்டப்பட்டிருந்த தொகையை கண்டு மாரியப்பனும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். அதில் மின்கட்டணமாக ரூ.1 கோடி 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் பயன்படுத்திய மின்சாரத்திற்கு இவ்வளவு பெரிய தொகையா? என அதிர்ச்சியடைந்த மாரியப்பன், உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்:
“அதிகப்படியான மின்கட்டணம் வந்துள்ளது உண்மைதான். தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனிதப் பிழை காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இன்று மதியம் 12 மணிக்குள் இந்தத் தவறு சரிசெய்யப்பட்டு, சரியான கட்டணம் பதிவேற்றம் செய்யப்படும். மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையால், அவுட்சோர்சிங் ஊழியர்கள் மூலம் மின்கணக்கீடு செய்யும் பணி நடைபெறுகிறது. அப்போது ஏற்பட்ட தவறின் காரணமாக இந்தக் குளறுபடி நிகழ்ந்திருக்கலாம்” எனத் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மின்மீட்டரில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான அளவு கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மின்கட்டணக் கோளாறு தொகையை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.