சென்னை வளசரவாக்கத்தில் தீ விபத்து; முதிய தம்பதி பலி
தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும், 3 வாகனங்களில் சென்ற 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.;
சென்னை,
சென்னை வளசரவாக்கத்தில் சவுத்ரி நகரில் உள்ள பங்களா வீட்டில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த வயது முதிர்ந்த தம்பதி சிக்கி கொண்டனர். தீயை தொடர்ந்து ஏற்பட்ட கரும்புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்களால் வெளியே வர முடியவில்லை. இந்த தீ விபத்தில் அந்த தம்பதி பலியாகி உள்ளனர்.
அவர்கள் நடராஜன் (வயது 70) மற்றும் அவருடைய மனைவி தங்கம் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த தகவல் அறிந்ததும், 3 வாகனங்களில் சென்ற 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் அந்த வீட்டில் இருந்து ஸ்ரீராம் என்பவர் மீட்கப்பட்டார். இதுபற்றி கோயம்பேடு துணை ஆணையாளர் அதிவீர பாண்டியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.