பிளாஸ்டிக் ஸ்டிராக்கள் பயன்பாட்டுக்கு உணவு பாதுகாப்புத்துறை தடை
ஜூஸ், இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.;
சென்னை,
பிளாஸ்டிக் ஸ்டிராக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றை பயன்படுத்தி விட்டு, முறையாக நீக்குவதில்லை. கண்ட இடங்களில் அவற்றை தூக்கி எறிவதும், குப்பை கூடையில் போடாமல் தெருக்களில் வீசுவதும் அதிகரித்து காணப்படுகிறது. இது முறையாக நீக்கப்படாமல் கழிவுகளாக சேருகிறது.
பரவலாக மழை பெய்யும்போது, அவை மண்ணுக்குள் புதைந்து அதனை கண்டறிய முடியாமலேயே போய் விடுகிறது. அவை மக்கும் தன்மையற்றவை என்பதனால், மண்ணின் தன்மையும் கெடுகிறது. பல வகையிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஜூஸ் கடைகள், உணவு விடுதிகள், இளநீர் கடைகளில் இனி பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்த கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பிளாஸ்டிக் ஸ்டிராக்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது. அவற்றுக்கு பதிலாக பேப்பர் ஸ்டிரா அல்லது சில்வர் ஸ்டிராக்களை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.