கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை! - புதிய மசோதாவை தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்
கடன் வழங்கும் நிறுவனங்கள், வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.;
சென்னை,
தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். புதிய சட்டத் திருத்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு;
"* தனிநபர்கள், தனி நபர்கள் குழு, சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கடன்கள் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.
* இந்த சட்டத்திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம்.
* கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது.
* கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்காட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
* வலுக்கட்டாய நடவடிக்கைகளால் கடன்பெறுபவர் அல்லது அவரது உறுப்பினர்கள் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால் கடன் கொடுத்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படுவார்கள்.
* இச்சட்டமுன்வடிவின் படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் பிணையில் வெளிவரமுடியாது.
கடன் வழங்கும் நிறுவனங்கள் அதனை வசூலிக்க முறையற்ற வழியை நாடுகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.