வைணவ கோவில்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: முதியோர்கள் விண்ணப்பிக்கலாம்
புரட்டாசி மாதத்தில் முக்கிய வைணவத் கோவில்களுக்கு 2 ஆயிரம் பக்தர்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.;
கோப்புப்படம்
சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்களில் தரிசனம் செய்ய கட்டணமில்லா ஆன்மிகப் பயணம் அழைத்து செல்லப்படுகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு 4 கட்டங்களாக செப்டம்பர் 20, 27, அக்டோபர் 4, 11 ஆகிய நாட்களில் இந்த ஆன்மிகப் பயணம் அந்தந்த மண்டலங்களிலிருந்து தொடங்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் கோவில்களுக்கு 2 ஆயிரம் பக்தர்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் கார்டு நகல் இணைக்கப்பட வேண்டும்.
இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.