வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் சரக்கு ரெயில் சோதனை ஓட்டம்
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;
சென்னை,
சென்னை வேளச்சேரி- பரங்கிமலை இடையே ரூ.730 கோடி மதிப்பீட்டில் நீட்டிக்கப்பட்டு வரும் பறக்கும் ரெயில் வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் அந்த வழித்தடத்தை மின்மயமாக்கும் உள்ளிட்ட அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட நிறைவைந்தன. 17 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு, வேளச்சேரிக்கும் பரங்கிமலை மவுண்ட்டுக்கும் இடையிலான நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரெயில் வழித்தடம் இறுதியாக டிசம்பர் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் பறக்கும் ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பழவந்தாங்கல், ஆலந்தூர், அடையாறு, திருவான்மியூர், துரைபாக்கம், தி.நகர் இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வேளச்சேரி - பரங்கிமலை வழித்தடத்தில் சரக்கு ரெயில் பெட்டிகளை கொண்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. இன்றைய சோதனை ஓட்டம் 12 பெட்டிகள் கொண்ட முழுநீள ரெயில் மூலம் மேற்கொள்ளப்பட்டது. வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை, ஒவ்வொரு நிலையத்திலும் நிறுத்தி ரயிலின் இயக்கம், பிரேக் சிஸ்டம், மின் இணைப்புகள், சிக்னல் இணைப்புகள் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன.
சோதனை ஓட்டம் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடைபெற்றுள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்சார இயக்கம், சிக்னல் அமைப்பு, பாதுகாப்பு சோதனை ஆகியவை அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ரெயில்வே பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.