தாயை இழந்த 16 வயது சிறுமியை விபசாரத்தில் தள்ளிய கும்பல்: 9 பேர் கைது

வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை சிறுமி நிறுத்தியுள்ளார்.;

Update:2025-09-25 15:25 IST

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமிக்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

இது குறித்து சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற மகளிர் போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

தாய் இறந்துவிட்ட நிலையில் சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். 8-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வறுமையின் காரணமாக படிப்பை நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் சிறுமியை சந்தித்த பெண் ஒருவர், ஆதரவற்ற நிலையில் இருந்த சிறுமிக்கு உதவி செய்வதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்ட அந்த பெண், ஓரிரு நாட்கள் கழித்து அந்த சிறுமியை தஞ்சைக்கு வருமாறு கூறியுள்ளார். தனக்கு ஒரு வேலை கிைடக்கும் என்ற நம்பிக்கையில் ஆசை, ஆசையாக தஞ்சைக்கு சென்ற சிறுமியை அந்த பெண் படுபாதாளத்தில் தள்ளி உள்ளார்.

ஆம்! அந்த சிறுமிக்கு நல்ல வாழ்க்கையை தேர்வு செய்து கொடுப்பதற்கு பதிலாக அவரது எதிர்கால வாழ்க்கையையே நாசப்படுத்தி விட்டார் அந்த பெண். சிறுமியை விபசாரத்தில் அந்த பெண் ஈடுபடுத்தி உள்ளார். பல மாதங்கள் பல்வேறு இடங்களுக்கு அந்த சிறுமியை விபசாரத்துக்கு அந்த பெண் அனுப்பி வைத்துள்ளார். இதனிடையே அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

கர்ப்பமானவுடன் அந்த சிறுமியை அந்த பெண் மன்னார்குடிக்கு அனுப்பி வைத்து விட்டார். மேற்கண்ட தகவல்களை விசாரணையின்போது போலீசாரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மன்னார்குடி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை சீரழித்தவர்கள் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில் சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் பகுதியை சேர்ந்த கனகராஜ்(வயது 32), தினேஷ்(29), செல்வகுமார்(41) மற்றும் திருமங்கலக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(24), சக்திவேல்(34) மற்றும் மதுக்கூரை அடுத்த வாட்டாக்குடியை சேர்ந்த விக்னேஷ்(23) ஆகிய 6 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் சிறுமியை விபசாரத்தில் தள்ளிய புரோக்கர்களான தஞ்சையைச் சேர்ந்த மலர்க்கொடி(42), தவக்கல் பாட்ஷா(58), ராதிகா(35) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே அந்த சிறுமிக்கு பிறந்த குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிறுமி அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்