வேலைக்கே செல்லாமல் ரூ.37.54 லட்சம் சம்பளம்... மனைவியை வைத்து லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி
‘சம்பளம்’ என்ற பெயரில் அரசு அதிகாரியின் மனைவிக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் ரூ.37.54 லட்சம் பணம் செலுத்தப்பட்டுள்ளது.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநில அரசுக்கு சொந்தமான ராஜ்காம்ப் இன்போ சர்வீசஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை இணை இயக்குநராக பணியாற்றி வருபவர் பிரத்யுமான் திக்சித். இவரது மனைவி பூனம் திக்சித். இந்நிலையில், ராஜஸ்தான் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், பிரத்யுமான் திக்சித், அரசின் டெண்டர்களை வழங்குவதற்காக 2 தனியார் நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, கடந்த ஜனவரி 2019-ல் இருந்து செப்டம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில், பிரத்யுமானின் மனைவி பூனம் திக்சித்திற்கு சொந்தமான 5 வங்கி கணக்குகளில் ரூ.37.54 லட்சம் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த பணத்தை 2 தனியார் நிறுவனங்கள் செலுத்தியுள்ளன. அதோடு, ‘சம்பளம்’ என்ற பெயரில் இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த 2 நிறுவனங்களிலும் பூனம் திக்சித் வேலை செய்ததாக வருகை பதிவேடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்து தீவிர விசாரணை நடத்தியபோது, பூனம் திக்சித் ஒரு முறை கூட அந்த 2 நிறுவனங்களுக்கும் நேரில் சென்றது இல்லை என்பது தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட வருகைப் பதிவுகள் அனைத்தும் போலியானவை என்பதும், அவை பூனம் திக்சித்தின் கணவரான அரசு அதிகாரி பிரத்யுமானின் உதவியுடன் தயார் செய்யப்பட்டுள்ளன என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்களுக்கும் அரசின் பல்வேறு டெண்டர்கள் வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அதிகாரியான பிரத்யுமான், சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்களிலும் தனது மனைவி வேலை செய்வது போலவும், அதற்கு சம்பளமாக அந்த 2 நிறுவனங்களில் இருந்து பணம் பெறுவது போலவும் சித்தரித்து, ரூ.37.54 பணத்தை லஞ்சமாக வாங்கியுள்ளார். பதிலுக்கு அந்த நிறுவனங்களுக்கு அரசின் டெண்டர்கள் கிடைக்க ஏற்பாடுகளை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது பிரத்யுமான் திக்சித் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.