கவர்னர் தனது விருப்பப்படி சட்டங்களை தடை செய்வது ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானது: செல்வப்பெருந்தகை

உச்சநீதிமன்றமே இதையே கேள்வியாக எழுப்பியுள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்;

Update:2025-08-26 21:06 IST

சென்னை ,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கவர்னருக்கு வீட்டோ அதிகாரம் உண்டா? என்ற அடிப்படை கேள்வியை உச்சநீதிமன்றமே இன்று வெளிப்படையாக முன்வைத்திருப்பது, இந்திய அரசமைப்பின் உயிரான ஜனநாயகத்தை பாதுகாக்கும் முக்கியமான படியாகும்.

மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டங்கள் மீது முறையற்ற முறையில் ஆளுநர் தலையிடும் நிலைமைகள் குறித்துத் தொடர்ந்து எச்சரித்து வந்த நாம், இன்று உச்சநீதிமன்றமே இதையே கேள்வியாக எழுப்பியுள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமே அரசமைப்பின் ஆதாரம். அதனை மதிக்காமல், கவர்னர் தனது விருப்பப்படி சட்டங்களை தடை செய்வது ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது என்பதை நீதிமன்றத்தின் இந்தக் கருத்து வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தொடர்ந்து இந்தக் கேள்வியை முன்வைத்து, மாநில சுயாட்சியை உறுதி செய்வதில் எடுத்த உறுதியான நிலைப்பாட்டை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனமுவந்து பாராட்டுகிறது.

இந்திய அரசியலமைப்பையும், மக்களாட்சியையும் காக்கும் வகையில் தொடர்ந்து போராடி வரும் மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் நிலைப்பாட்டுக்கு இன்று உச்சநீதிமன்றத்தின் கருத்தே ஒரு வலுவான ஆதாரமாக திகழ்கிறது.

ஜனநாயகத்தின் உயிர் மக்களின் சட்டமன்றமே என்பதை நினைவூட்டிய உச்சநீதிமன்றத்தின் இந்தக் கேள்விக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்