திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனே மேல்முறையீடு செய்ய எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
திருப்பரங்குன்றத்தில் உள்ள நில அளவைத் தூணில் தனி நீதிபதி உத்தரவுப்படி தீபம் ஏற்றிட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.;
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் மலையில் நூற்றாண்டுகாலமாகத் தொடரும் பாரம்பரிய வழக்கத்தை மாற்றி, மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள நில அளவைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதற்கு எதிராக தமிழக அரசு, கோயில் நிர்வாகம், தர்கா தரப்பு ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, தனி நீதிபதி உத்தரவுப்படி அத்தூணில் தீபம் ஏற்றிட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினையையும் பொது அமைதியையும் காரணமாகக் காட்டி தீபம் ஏற்றுவதற்குத் தடை விதிக்க முடியாது என்ற நீதிமன்றக் கருத்து, அரசின் நியாயமான அச்சங்களை முற்றிலும் புறக்கணித்துள்ளது. சட்டம்-ஒழுங்கைப் பேணிக் காப்பதில் அரசுக்கே முதன்மையான பொறுப்பும் கடமையும் உள்ளது என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
வழக்கமான நடைமுறைக்கு மாறான புதிய நடவடிக்கை சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்துவிடலாம்; அது சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பது அரசின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.
நீதிமன்ற உத்தரவுகள் சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் அதற்கெதிராக அமையக்கூடாது. ஆகவே, இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.