வேலைவாய்ப்புக்கும், படிப்புக்கும் ஜெர்மனியை நாடும் இந்தியர்கள்

வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களில் 42 சதவீதம் பேர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள்.;

Update:2025-10-10 02:59 IST

உயர் படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் இந்தியர்களின் குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்களின் முதல் தேர்வு அமெரிக்காவாகத்தான் காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு இதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. மாணவர் விசாவிலும், வேலைவாய்ப்பிலும் பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்தியர்களுக்கு விரும்பி வேலைவாய்ப்பு கொடுக்கும் நிறுவனங்களுக்கும் இப்போது பல முட்டுக்கட்டைகள் ஏற்பட்டிருக்கின்றன. சமீபத்தில் கூட டிரம்ப், தகவல் தொழில்நுட்ப நிறுவன அதிபர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்த நேரத்தில் உங்கள் நிறுவனங்களில் கூடுமான வரையில் அமெரிக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுங்கள் என்று வலியுறுத்தினார்.

அதுபோல நிறுவனங்களும் அமெரிக்காவிலேயே தங்கள் தொழிற்சாலைகளையும், அலுவலகங்களையும் தொடங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். இந்த நிலையில் இப்போது இந்திய மாணவர்களின் பார்வை ஜெர்மனி மீது விழுந்திருக்கிறது. கடந்த ஆண்டு நிலவரப்படி 13 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 34 ஆயிரத்து 134 இந்திய மாணவர்கள், ஜெர்மனியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். 2022-ல் ஜெர்மனியில் படிப்புக்காக சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 13.2 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 32.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் சேரும் மாணவர்களின் சதவீதம் கடந்த ஆண்டைவிட இப்போது 13 சதவீதம் குறைந்துள்ளது. இந்த 13 சதவீதமும் பெரும்பாலும் ஜெர்மனியைத்தான் நாடி சென்று இருக்கிறார்கள்.

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களில் 42 சதவீதம் பேர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர் அங்கு வேலை பார்த்துக்கொண்டு இருப்பதால்தான் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஜெர்மனியை ஏன் இந்திய மாணவர்கள் நாடுகிறார்கள் என்றால், அங்கு படிப்பு செலவு குறைவு என்பது மட்டுமல்லாமல், ‘ஸ்காலர்ஷிப்’ (உதவித்தொகை) நிறைய கிடைக்கிறது. வாழ்க்கையை ஓட்டுவதற்கான செலவும் குறைவாக இருக்கிறது. படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு சுலபமாக கிடைக்கிறது. இது மட்டுமல்லாமல் அங்குள்ள அரசு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்தால் இலவச கல்வி என்பது பெரிய வரப்பிரசாதமாகும். மேலும் படித்து முடித்தவுடன் 18 மாதங்கள் அங்கு தங்கியிருந்து வேலை தேடிக்கொள்ள விசா நீட்டிப்பு செய்யப்படுகிறது.

ஜெர்மனியில் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிறைய இருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் மட்டும் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், கல்வி, கட்டுமானம், பொது போக்குவரத்து துறைகளில் 14 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் ஜெர்மனியில் 5 லட்சம் திறன் சார்ந்த தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர் மான் தெரிவித்துள்ளார். ஆக சாதாரண தொழிலை செய்யும் தொழிலாளர்களும் அங்கு தேவைப்படுகிறார்கள். ஜெர்மனி மொழி தெரிந்து இருந்தால் அங்கு எளிதாக நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பை பெறமுடியும். ஜெர்மனியின் பங்களிப்போடு இப்போது இந்தியாவில் 58 பள்ளிகளில் ஜெர்மன் மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதை 1,000 பள்ளிக்கூடங்களாக உயர்த்த ஜெர்மனி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழக அரசின் கல்வித்துறை இந்த 1,000 பள்ளிக்கூடங்களில் தமிழ்நாட்டுக்கு கணிசமாக பெறவும், தமிழக அரசுக்கு சொந்தமான அயல் நாட்டில் வேலை தேடித்தரும் நிறுவனம் தமிழக இளைஞர்களுக்கு ஜெர்மனியில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரவும் முயற்சி எடுக்கவேண்டும்.

 

Tags:    

மேலும் செய்திகள்