அடிதடி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்.. அடுத்து நடந்த சம்பவம்

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update:2025-10-25 03:40 IST


நாகர்கோவில் வடக்கு கோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் என்ற சந்தை ராஜன் (வயது47). இவர் இந்து தமிழர் கட்சி நிர்வாகியாக உள்ளார். இவர் மீது நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு அடிதடி புகார் வந்தது. இந்த வழக்கில் அவரது பெயரை சேர்க்காமல் விடுவிக்க, இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் (58) ரூ.3 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என ராஜனிடம் கூறியுள்ளார். இதையடுத்து ராஜனும் ரூ.1.85 லட்சத்தை அன்பு பிரகாஷிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் மீதமுள்ள லஞ்ச பணத்தையும் கேட்டு இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் அவரை மிரட்டியதாக தெரிகிறது. மேலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜன் இதுபற்றி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். பிறகு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் ரூ.1.15 லட்சத்தை நேற்று ஆரல்வாய்மொழியில் உள்ள இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வீட்டில் வைத்து அவரிடம் ராஜன் கொடுத்தார்.

லஞ்ச பணத்தை இன்ஸ்பெக்டர் பெற்றுக் கொண்ட போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எஸ்கால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமா மற்றும் போலீசார் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாசை கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கி கைதான அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். கட்சி நிர்வாகியிடம் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியவர்

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் கடந்த 15 ஆண்டுகளாக களியக்காவிளை, கோட்டார், தக்கலை, ஆரல்வாய்மொழி என பல்வேறு போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியுள்ளார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் அவரது வீட்டில் இருந்து நகை-பணம் கைப்பற்றப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் லஞ்சம் வாங்கியதால் அவர் நேற்று கைது செய்யப்பட்டது போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்