காணும் பொங்கல்: களை கட்டிய கொண்டாட்டம்: சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.;
சென்னை,
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டது. இன்று காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரையில் இன்று காலை முதலே பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டனர்.
இதேபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். இதன் காரணமாக மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா பகுதிகளும் களைகட்டி காணப்பட்டன. பொழுதுபோக்கு மையங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டதால், எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.