‘இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் அல்ல; கவர்ச்சி, வீழ்ச்சி திட்டம்’ - சீமான் விமர்சனம்
'ஜனநாயகன்' படத்துக்கு இவ்வளவு கால நீட்டிப்பு தேவை இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் புதிதாக என்ன இருக்கிறது? ஏற்கனவே ரூ.1,000 கொடுக்கப்படுகிறது. இப்போது கூடுதலாக ரூ.1,000 கொடுக்கப் போகிறீர்கள். ரூ.10 லட்சம் கோடி கடன், ரூ.15 லட்சம் கோடியாக மாறும். ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் சொல்லியிருக்கிறார்கள். அதனை யாராவது கேட்டார்களா? ஏற்கனவே ரூ.1 லட்சம் கோடி இழப்பில் போகிறது. இலவசமாக கொடுப்பதை எங்கிருந்து எடுப்பீர்கள்? இது நல்ல திட்டமா? நஷ்டமா?
இலவசமாக பயணிக்கும் அளவுக்கு நல்ல பஸ் இருக்கிறதா? இலவச பஸ் பயணத்துக்கு என்ன மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை கேட்டது இல்லையா? இது ஒரு நலத்திட்டமா? வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில், அறிவிப்பவர்கள் குடியிருப்பார்களா? அது ஒரு பெரிய கோழிக்கூடு அவ்வளவுதான். ஆக்கப்பூர்வமாக எதையாவது சொல்ல சொல்லுங்கள். தரமான பஸ் இயக்கப்படும். மாதம் ரூ.20 ஆயிரம் ஈட்டும் அளவுக்கு வேலைவாய்ப்பை தாய்மார்களுக்கு கொடுக்கப்படும் என சொல்ல சொல்லுங்கள். அவர்கள் கொடுப்பதெல்லாம் தேர்தல் அறிக்கை.
நான், ஆட்சி எப்படி நடக்கும்? எப்படி நடத்த வேண்டும்? என்று சொல்கிறேன். இலவசம் வளர்ச்சித்திட்டம் அல்ல. கவர்ச்சி, வீழ்ச்சி திட்டம். இலவசத்தால் எந்த வளர்ச்சியும் காணமுடியாது. ஆள், ஆட்சி மட்டும்தான் மாறுகிறது. ஊழல், கமிஷன், சாராயக்கடை, மின்தட்டுப்பாடு, சாலை வசதி, மருத்துவத்தரம் என எதுவுமே மாறவில்லை.
எனவே ஆட்சி முறையில் மாற்றம் வேண்டும். கல்வி, மருத்துவம் தரமாக கொடுக்கப்பட்டுவிட்டால், மக்களுக்கு செலவு மிச்சம் ஆகும். அப்படி நிர்வாகம் இங்கு இல்லை. ஜனநாயகம் இங்கு நடக்கவில்லை. பணநாயகம்தான் நடக்கிறது. அதை மாற்றவேண்டும்.
சட்டமன்ற தேர்தலில் நான் தனித்து போட்டிதான். பிப்ரவரி 21-ந்தேதி மாநாட்டில் வேட்பாளர்கள் அனைவரையும் அறிவிக்கிறேன். கட்சிகளோடு கூட்டணி வைக்க வேண்டும் என்றால், நான் தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லையே. என் பாதை வேறு. பன்னெடுங்காலமாக நரகத்தில் இருக்கும் மக்களை சொர்க்கத்துக்கு அழைத்து செல்லும்பாதை அது. கூட்டணிக்கு அழைப்பு வந்துகொண்டுதான் இருக்கிறது.
ஒரு சதவீதம், 2 சதவீதம் வாக்கு வங்கி வைத்திருப்பவர்களுக்கே சீட்டு, நோட்டு பேரம் பேசி இருக்கும்போது, எனக்கு அழைப்பு வராதா? நான் அதை விரும்பவில்லை. நிச்சயம் அதை செய்யமாட்டேன். விஜயகாந்த் தனித்து நிற்கும்போது 10.5 சதவீதம் வாக்கு இருந்தது. இன்று என்ன வாக்கு இருக்கும் என்று நினைக்கிறீர்கள். அவர் கூட்டணி வைத்ததால் வாக்கு குறைந்தது. கூட்டணி வைப்பதால் நம்பிக்கை, தனித்துவத்தை இழக்கிறோம். அதை நான் இழக்கக்கூடாது என நினைக்கிறேன்.
'ஜனநாயகன்' படத்துக்கு இவ்வளவு கால நீட்டிப்பு தேவை இல்லை. அந்த படத்தில் என்னென்ன காட்சிகள் பிரச்சினைக்குரியது என நினைக்கிறார்களோ, அதை நீக்கிவிட்டு, வெளியிட அனுமதிப்பதுதான், சரியான ஜனநாயகம். எப்படிப்பட்ட கருத்து சுதந்திரத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.