கன்னியாகுமரி: காவல் நிலையத்தில் இளைஞரை தாக்கிய போலீசார் - வீடியோ வெளியாகி பரபரப்பு
காவல் நிலையத்தில் இளைஞரை போலீசார் தாக்கியதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.;
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் அனீஷ்பாபு(வயது 19). இவர் மேளக் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கடுக்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது இரண்டு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தகராறு செய்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் அனீஷ்பாபுவுடன் இருந்த நண்பர்கள் சிலர் தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் அனீஷ்பாபு மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனீஷ்பாபுவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.