கார்த்திகை தீபத்திருவிழா.. கரூர் மாவட்டத்தில் மகா தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

கார்த்திகை தீபத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2025-12-04 10:54 IST

ஆர்.டி.மலை மீது விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்ட காட்சி

கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் திருக்கார்த்திகை நாளிலாவது நிச்சயம் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. சொக்கப்பனையும் கொளுத்தப்பட்டது. வீடுகளில் பொதுமக்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். மேலும் கோவில்களில் அகல் விளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்ட காட்சி

இதையொட்டி கோவில் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விளக்குகள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து மாலை நேரத்தில் மேளதாளங்கள் முழங்க பசுபதீஸ்வரர், அலங்காரவள்ளி-சவுந்தரநாயகி, விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் மற்றும் கணம்புல்ல நாயனார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு, பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து ராஜகோபுரத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

பின்னர் இரவு 7 மணியளவில் கோவில் வெளிப்புறத்தில் பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அப்போது தீபம் சுடர்விட்டு எரிந்தது. அதனை பக்தர்கள் பயபக்தியுடன் இருகரம் கூப்பி தரிசித்தனர். பின்னர் சாமிகளின் திருவீதியுலா கோவில் உள்பிரகாரத்தில் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலை மீது அமைந்துள்ள விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் 1,100 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரை வைத்து 90 மீட்டர் நீளம் கொண்ட திரி அமைக்கப்பட்டு கார்த்திகை தீபத்தை சிவாச்சாரியார் கந்த சுப்பிரமணியம், வேதரெத்னசிவம் ஆகியோரின் தலைமையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சின்னரெட்டிபட்டி ஆவுலிங்கேஸ்வரர் கோவில், தோகைமலை வரதராஜ பெருமாள் கோவில், மேல கம்பேஸ்வரம் பெருமாள் கோவில்களில் கார்த்திகை தீப விளக்கு ஏற்றப்பட்டது.

குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ரெத்தினகிரீசுவரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து இக்கோவில் மலை உச்சியில் நேற்று மாலை 6 மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது மழையில் அணையாத வகையில் இந்த தீபம் 3 நாட்களுக்கு தொடர்ந்து எரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குளித்தலை நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் உள்ள கோவில்களில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சில கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வீடுகளில் அகல்விளக்கு மற்றும் குத்துவிளக்குகளை ஏற்றி வைத்தனர். தீபாவளி பண்டிகை போல சிறுவர், சிறுமிகள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். குளித்தலையை சுற்றியுள்ள பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்