இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:
மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மாண்புமிகு உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் விடியா திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த முக ஸ்டாலின் மாடல் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
அமித்ஷாவுடன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் அமித்ஷா- அண்ணாமலை சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்துவரும் பாஜக எம்பி பி.பி.சவுத்ரி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை
டெல்லியில் எம்பிக்கள், இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் தினேஷ் மகேஸ்வரி, காங். எம்பிக்கள் பிரியங்கா காந்தி, மணிஷ் திவாரி உள்ளிட்டோர் பங்கேற்பு
பொதுவாக இந்தியாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை சந்திப்பது வழக்கம். வாஜ்பாய் ஜி, மன்மோகன் சிங் அரசாங்கத்தில் இதுதான் நடந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் சந்திப்பதை மோடி அரசு விரும்பவில்லை. நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம், எதிர்கட்சித் தலைவரை சந்திக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்படுவதாக அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே 2வது நாளாக தொடரும் துப்பாக்கி சண்டை 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் 18 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். நக்சலைட்களிடம் இருந்து துப்பாக்கி, வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவிருந்த ரோடுஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் டிச.9ம் தேதி விஜய் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தவெக மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய விஞ்ஞானிகள் நமது பால்வீதியை (Milkyway Galaxy) போலவே, ஒரு புதிய சுழல் விண்மீன் கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். Alaknanda என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்மீன் கூட்டம், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆராய்ச்சிக்கு இது உதவும் என கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றம் வழக்கில் பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுமாறு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தவில்லை எனக்கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை கலெக்டர் மற்றும் ஆணையர் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.