கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்க்கு சிபிஐ சம்மன்

வரும் 12 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.;

Update:2026-01-06 14:01 IST

சென்னை,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந்தேதி கரூரில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தினார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் 41 பேர் பலியானார்கள். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் 2025-ம் ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய கோர சம்பவமாகும். இந்த சம்பவம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கரூரில் முகாமிட்டு விசாரணை தொடங்கிய சி.பி.ஐ. குழுவினர் அங்குள்ளவர்களிடமும், த.வெ.க. நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தினர். போலீஸ் அதிகாரிகளிடம் நடந்த சம்பவத்தை கேட்டு பதிவு செய்தனர். இதற்கிடையே, அடுத்த கட்ட விசாரணைக்காக த.வெ.க. நிர்வாகிகள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் கடந்த 29-ஆம் தேதி ஆஜரானார்கள். அதேபோல், கரூர் கலெக்டர் தங்கவேலு, போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானார்கள். முதல் நாளில் த.வெ.க. நிர்வாகிகளிடம் 9 மணி நேரமும், 2-வது நாளில் 7 மணி நேரமும் விசாரணை நடந்தது. மூன்றாவது நாளில், அதாவது 31-ஆம் தேதி, சுமார் 3 மணி நேரமும் விசாரணை நடைபெற்றது. இந்த 3 நாட்கள் விசாரணையிலும் த.வெ.க. நிர்வாகிகளிடம் கரூர் கொடூர சம்பவம் குறித்த நிகழ்வுகள் குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். குறிப்பாக விஜய் பிரசார வாகன ஓட்டுனரிடமும் கிடுக்கிடி விசாரணை நடந்தது. இந்த விசாரணை முடிவடைந்துள்ளதாகவும், தேவைப்பட்டால் கூப்பிடுவதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்தனர்.

விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த த.வெ.க. நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறுகையில், எல்லா விசாரணையும் முடிவடைந்தது. எங்கள் தரப்பில் அனைத்து விதமான விளக்கங்களையும் கொடுத்திருக்கிறோம். இதனை அதிகாரிகள் பரிசோதித்து, தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் எங்களிடம் மேலும் விளக்கங்களை கேட்டாலும், எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் என்பதை கூறியிருக்கிறோம். 41 பேரின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருப்பதால், என்ன விளக்கங்களை கேட்டாலும் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம். இதற்கு மேல் உள்ளே நடந்த விசாரணை சம்பந்தமாக பொதுவெளியில் சொல்வது சரியாக இருக்காது. சி.பி.ஐ. விசாரணையை முடித்த பிறகு, அவர்களே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள்.

எங்கள் தரப்பில் என்னென்ன நியாயங்கள் இருக்கின்றன, தமிழக அரசு எந்த இடத்தில் தவறு செய்திருக்கிறது, காவல்துறை எங்கு தவறு செய்திருக்கிறது, இந்த சம்பவம் நடைபெறாமல் காவல்துறை எங்கு தடுத்திருக்கலாம் என்பது தொடர்பாக பல்வேறு விஷயங்களை நாங்கள் தெரிவித்திருக்கிறோம். அதேபோல், நிறைய வீடியோ ஆதாரங்களையும் வழங்கியிருக்கிறோம். எல்லாவற்றையும் நாங்கள் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்” என்றார்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விஜய்யிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், இன்று சி.பி.ஐ. தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுமாறு சி.பி.ஐ. சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சம்மனை ஏற்று விஜய் வரும் 12-ஆம் தேதி சி.பி.ஐ. முன் ஆஜராக உள்ளார். அப்போது கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்