நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் திருவிழா தொடங்கியது. காணிக்கை செலுத்தி படுகர் இன மக்கள் வழிபட்டனர்.;
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் வாழ்ந்து வரும் படுகர் இன மக்கள் ஹெத்தையம்மன் திருவிழாவை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். இந்த திருவிழா நேற்று முன் தினம் தொடங்கியது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த சக்கலாத்தி பண்டிகையில் இருந்து விரதம் இருந்து வரும் பக்தர்கள், தங்களது கிராமத்தில் உள்ள கோவிலில் இருந்து மடிமனை கோவிலுக்கு ஆடல், பாடல், மேளதாளங்களுடன், அம்மனை வண்ண கொடைகளின் கீழ், செங்கோல் ஏந்தி ஊர்வலமாக மடிமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்லாமல் ஒரு வாரம் மடிமனை கோவிலிலேயே தங்கி, விரதமிருந்து சம்பிரதாயப்படி கத்திகை என்னும் அருள்வாக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று, அம்மனை மீண்டும் கிராம கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றனர். விழாவின் ஒரு பகுதியாக நேற்று முன் தினம் பேரகணி கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலமாக பனகம்பை சுத்துக்கல் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து கப்பட்டி, கடைகம்பட்டி, கன்னேரிமுக்கு, கேர்பெட்டா உள்ளிட்ட கிராமங்களுக்கு அம்மன் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் கேர்பெட்டா சுத்துக்கல் பகுதியில் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை), பேரகணி, 9-ந் தேதி காத்துகுளி, 10-ந் தேதி ஒன்னதலை மடிமனைகளில் விழா நடைபெறுகிறது. முக்கிய திருவிழா நாட்களான 11, 12-ந் தேதிகளில் கோத்தகிரியில் பழமை வாய்ந்த பேரகணி, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல், சின்ன குன்னூர், எப்பநாடு, பெப்பேன் ஆகிய மடியாடாக்களில் திருவிழா நடைபெறுகிறது. அதோடு அருள்வாக்கு மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி இன்று நீலகிரி மாவட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இன்றைய விடுமுறையை ஈடுசெய்ய வரும் 24ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழாவையொட்டி படுகர் இன மக்கள் வாழ்கின்ற கிராமங்கள் விழாக்கோலம் பூண்டு காணப்படுகின்றன.