மதுரையில் சிறுமி உயிரிழந்த சம்பவம்: நேரில் சென்று விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவு
சம்பவம் நடந்த தனியார் பள்ளியில் காவல் துணை ஆணையர் அனிதா நேரில் விசாரணை நடத்தினார்.;
மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி ஆருத்ரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
முன்னதாக பள்ளியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளிக்கு பின்புறம் மூடப்படாமல் இருந்த 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில் சிறுமி விழுந்ததாக கூறப்படுகிறது. சிறுமியில் கூக்குரலை கேட்டு அங்கு வந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். இந்த சூழலில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சிறுமி உயிரிழந்தது தொடர்பாக பள்ளியின் தாளாளர் திவ்யா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் காவல் துணை ஆணையர் அனிதா நேரில் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.