சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா நியமனம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக, ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.;

Update:2025-07-15 06:20 IST

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருப்பவர் கே.ஆர்.ஸ்ரீராம். இவர், வருகிற செப்டம்பர் 28-ந் தேதியுடன் ஓய்வுபெற உள்ளநிலையில், ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவருக்கு பதில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக, ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்தார். மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா 1964-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி சத்தீஷ்கார் மாநிலம் பிலாஸ்பூரில் பிறந்தவர்.

1987-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி மத்தியபிரதேச மாநில பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார். ராய்கர் மாவட்ட நீதிமன்றம், மத்தியபிரதேச மற்றும் சத்தீஷ்கார் ஐகோர்ட்டுகளில் வக்கீலாக பணியாற்றினார்.

2005-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி முதல் மூத்த வக்கீலாக பணியாற்றி வந்த இவர், 2009-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி சத்தீஷ்கார் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி ராஜஸ்தான் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2024-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்