மன்னார்குடி காமராஜர் பேருந்து நிலையம் பெயர் மாற்றம்? - தமிழக அரசு விளக்கம்
மன்னார்குடி காமராஜர் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவது குறித்து நகர்மன்றத்தில் தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
புதுப்பிக்கப்பட்ட மன்னார்குடி காமராஜர் பேருந்து நிலையம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
இது முற்றிலும் பொய்யான தகவல். மன்னார்குடியில் காமராஜர் பெயரில் இயங்கி வரும் பேருந்து நிலையம் ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையமாக கட்டப்படுகிறது. இதன் பெயரை மாற்றுவது குறித்து நகர்மன்றத்தில் தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. புதிய பேருந்து நிலையத்துக்காக தயாரிக்கப்பட்ட மாதிரி வரைபடத்திலும் காமராஜர் பேருந்து நிலையம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பேருந்து நிலைய முகப்பில் புதிய பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது என்று மன்னார்குடி நகராட்சி கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். வதந்தியை நம்பாதீர்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.