கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி இன்று பதவியேற்றுக் கொண்டார்.;

Update:2025-03-15 00:01 IST

ஒட்டாவா,

கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடா நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றி பெற்றதாக அறிவித்தார். லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் பதவியேற்க உள்ளார்.

மார்க் கார்னி 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவீத வாக்குகளாகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கிறிஸ்டியா ப்ரீலேண்ட் (11,134 வாக்குகள்), கரினா கோல்ட் (4,785 வாக்குகள்), பிராங்க் பேலிஸ் (4,038 வாக்குகள்) பெற்றிருந்தனர்.இந்நிலையில், கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப், கனடா பொருட்களுக்கு வரியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், மார்க் கார்னி பிரதமராக பதவியேற்றுள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்