மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் வசிப்பிட அடிப்படையிலான ஒதுக்கீடுகள் எதுவும் கூடாது என்றும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்களுக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
மருத்துவப் படிப்புகளுக்கான மாநில இட ஒதுக்கீட்டில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக, சம்பந்தப்பட்ட சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை செய்து, தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பால் இந்த ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பாதிப்பு இல்லை. 50 சதவீத முதுநிலை மருத்துவ இட ஒதுக்கீடு மூலம் 1,207 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். சமூக நீதியை கடைபிடிப்பதில் இட ஒதுக்கீடு என்பது இன்றியமையாதது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவக் கட்டமைப்பு அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் சாதகமாக பார்க்கப்படுவது மற்ற மாநிலங்களில் பாதகமாக பார்க்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்களை ஒருங்கிணைப்பது என்பது சரியாக வராது. இவ்வாறு அவர் கூறினார்.