அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஒரு நாடு முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் அந்த நாட்டில் சுகாதாரம் பேணிப் பாதுகாக்கப்பட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை மக்கள் வாழ்வதற்குரிய சூழ்நிலையை மாநில அரசு உருவாக்கித் தர வேண்டும். இதன்மூலம் தான் அனைத்து மக்களும் நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்று அனைத்துச் செல்வங்களையும் எளிதில் பெறமுடியும். ஆனால் இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் கிண்டியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றில் உயிர் காக்கும் சிகிச்சைக்குரிய மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நிலையில், அந்த மாத்திரைகள் அங்கு இல்லாததன் காரணமாக, பொதுமக்கள் வெளியில் உள்ள தனியார் மருந்தகங்களுக்கு சென்று ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் செலுத்தி அந்த மாத்திரைகளை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்புளுயன்சா காய்ச்சல், சிறுநீரக கற்களை அகற்ற பயன்படுத்தப்படும் மாத்திரைகளும் மேற்படி அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் இருப்பில் இல்லை.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றபோது, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் வழங்கப்படும் மாத்திரைகள் விரைந்து காலியாகி விடுகின்றன என்றும், அரசு மருத்துவமனைகளுக்காக தனியாக ஒதுக்கப்படும் நிதியும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால் மருந்துகள் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் கூறுகின்றனர்.
சென்னையில் உள்ள பிரபலமான அரசு மருத்துவமனைகளிலேயே இதுபோன்ற நிலைமை இருக்கிறது என்றால், பிற மாவட்டங்களில், கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்பப் பணியாளர்கள் பற்றாக்குறை என்ற வரிசையில் மருந்துகள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளைக்கூட இருப்பில் வைத்துக் கொள்ள இயலாத திறமையற்ற அரசாக தி.மு.க அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு காரணமாக பாதிக்கப்படுபவர்கள் ஏழையெளிய மக்கள்தான்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு வளர்ச்சிக்கு மேம்பாட்டிற்கு அச்சாரமாக விளங்கும் ஆரோக்கியத்தை அனைத்துத் தரப்பு மக்களும் பெறும் வகையில், அனைத்து வகையான நோய்களுக்குரிய மருந்துகளையும் அரசு மருத்துவமனைகளில் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.