எச்.ஐ.வி. தொற்று பாதித்த 9 வயது மகனை கொன்று தாய் தற்கொலை: ஓசூரில் சோக சம்பவம்

9 வயது மகனுக்கு எய்ட்ஸ் நோய் கணவரிடம் இருந்து பரவி இருந்தது தெரியவந்தது.;

Update:2025-11-10 11:58 IST

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் 40 வயதான ஒருவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு 38 வயதில் மனைவியும், 17 வயதில் பிளஸ்-2 படிக்கும் மகளும், 9 வயதில் 4-ம் வகுப்பு படிக்கும் மகனும் என்று கால சக்கரம் மகிழ்ச்சியாக சென்றது.

இவர்களின் வாழ்வில் பேரிடியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தொழில் அதிபருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை மனைவி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்த போது, எச்.ஐ.வி. எனப்படும் வைரஸ் தொற்று பாதித்து எய்ட்ஸ் நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவரது மனைவியும்,, அவருடைய பிள்ளைகளும் ஆஸ்பத்திரியில் எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்து கொண்டனர். இதன்முடிவு நேற்று முன்தினம் அவர்களுக்கு கிடைத்தது. அதில் பிளஸ்-2 படிக்கும் மகளுக்கு மட்டும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. தாய்க்கும், 9 வயது மகனுக்கும் எய்ட்ஸ் நோய் கணவரிடம் இருந்து பரவி இருந்தது தெரியவந்தது.

நேற்று முன்தினம் இரவு தொழில் அதிபர் தனியாக வேறு அறையில் படுத்திருந்தார். அவருடைய மனைவியும், மகன், மகளும் படுக்கை அறையில் படுத்து இருந்தனர். அப்போது மகளிடம் நம் வாழ்க்கையே நாசமாகி விட்டது என்று அழுது புலம்பி உள்ளார். மேலும் தங்களுடன் வசித்து வந்தால் பிளஸ்-2 மாணவியான மகளுக்கும் இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று அச்சம் அடைந்தார்.

தானும் மகனும் இதேபோல் உடல்நலக்குறைவால் அவதிப்பட தானே வேண்டும் என்று பலவாறு யோசித்த அவர், ஒரு கட்டத்தில் எய்ட்ஸ் நோய் பாதித்த மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து தனது மனதை கல்லாக்கி கொண்டு அருகில் கிடந்த தலையணையை எடுத்து அசந்து தூங்கிய மகனின் முகத்தில் தலையணையால் அமுக்கி மூச்சு திணற அடித்து கொன்றார். மகனின் உடல் துடிப்புகள் அடங்கி அவன் இறந்து போனதை உறுதி செய்த அந்த பெண் தனது சேலையால் அங்கிருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே பிளஸ்-2 மாணவி நேற்று காலையில் எழுந்த போது, தனது கண் எதிரே தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததையும், தம்பி இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு தொழில் அதிபரும், அக்கம்பக்கத்தினரும் அங்கு விரைந்து வந்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்