இளம்பெண்ணிடம் பேச விடாமல் தடுத்த தாய்.. கொத்தனார் செய்த கொடூர செயல்

கொத்தனாருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-09-06 05:19 IST

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பட்டினம்காத்தான் போக்குவரத்து நகர் பகுதியை சேர்ந்தவர் இருளாண்டி மனைவி கருப்பாயி (வயது 45). கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது மகள் திவ்யா (21). இவருடைய கணவர் பாண்டியராஜன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். இதனால் திவ்யா தனது 2 குழந்தைகளுடன் தாய் கருப்பாயி வீட்டில் வசித்து வந்தார். இவர் ராமநாதபுரம் அருகே மீன் வலை பின்னும் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா ஏ.நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் கருப்பசாமி (23). கொத்தனாரான இவர் ராமநாதபுரம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது கருப்பசாமிக்கும், திவ்யாவிற்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் கருப்பசாமி அடிக்கடி திவ்யாவின் வீட்டிற்கு வருவது வழக்கம். இதனை திவ்யாவின் தாய் கருப்பாயி கண்டித்துள்ளார். இதனால் கருப்பசாமி, கருப்பாயிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் திவ்யாவும் இனி வீட்டிற்கு வரக்கூடாது என்று கூறினார். திவ்யா இவ்வாறு கூறியதற்கு கருப்பாயிதான் காரணம் என எண்ணி அவர் மீது ஆத்திரம் அடைந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென கருப்பசாமி, திவ்யாவின் வீட்டிற்கு சென்று கருப்பாயிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவரை தரதரவென இழுத்து சரமாரியாக தாக்கினார். பின்னர் வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து திவ்யாவை திருமணம் செய்து கொள்வதற்கும், அவரிடம் பழகுவதற்கும் இடையூறாக இருப்பதாக கூறி கருப்பாயியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கருப்பாயி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து கருப்பசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திவ்யா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது தாயை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கருப்பாயி இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து திவ்யா ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசுவரன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கஈஸ்வரன் ஆகியோர் அங்கு சென்று கருப்பாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கருப்பசாமியை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்