முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு; கேரளாவுக்கு உபரிநீர் திறப்பு; வெள்ள அபாய எச்சரிக்கை
152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி வரை நீர் தேக்கலாம்.;
கூடலூர்,
தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழும் இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி வரை நீர் தேக்கலாம். நேற்று காலை அணையின் நீர்மட்டம் 132 அடியாக இருந்தது. நீர்வரத்து அணைக்கு வினாடிக்கு 2,748 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,530 கன அடி நீர் தமிழக பகுதிக்கு வெளியேற்றப்பட்டது. நேற்று இரவில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்தது.
நள்ளிரவு 11 மணியளவில் அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரத்து 773 கன அடியாக அதிகரித்தது. இதனால், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப்பெரியாற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அணையில் இருந்து தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், கேரள நீர்வரத்துறை அதிகாரிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தகவலை அனுப்பினர்.
அதிகாலை 3 மணியளவில் நீர்மட்டம் 136 அடியை கடந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிக அளவில் இருந்ததால் காலை 6 மணியளவில் நீர்மட்டம் 137.80 அடியாக உயர்ந்தது. அப்போது நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 828 கன அடியாக இருந்தது. தொடர்ந்து காலை 9 மணியளவில் நீர்மட்டம் 138.45 அடியாக உயர்ந்தது.
வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து காலை 9 மணியளவில் அணையில் உள்ள 13 மதகுகளில், 3 மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு வினாடிக்கு 1,078 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து 11 மணியளவில் 8 மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் திறக்கும் அளவு 3,763 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
தொடர்ந்து நீர்வரத்து அதிக அளவில் இருந்ததால் பகல் 1 மணியளவில் அணையில் உள்ள 13 மதகுகளும் தலா 1 மீட்டர் உயரத்துக்கு திறக்கப்பட்டது. அதன் மூலம் வினாடிக்கு 7,163 கன அடி வீதம் கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அந்த உபரிநீர் வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு வழியாக இடுக்கி அணையை நோக்கி சென்றது. மாலையில் நீர்மட்டம் 139 அடியை எட்டியது. இதன் மூலம் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது.